வாட்ஸ்அப் குழுவில் ரகசிய பணப் பரிமாற்ற வலையமைப்பு ; வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உண்மை
வாட்ஸ்அப் (WatsApp) குழு ஒன்றின் ஊடாக கோடிக்கணக்கான யூரோக்கள் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒலிபரப்பு நிறுவனங்களின் (EBU) புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
"டிரேடர்ஸ் ஒஃப் கிரேட்டர் ஐரோப்பா" (Traders of Greater Europe) என்ற பெயரிலான 532 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு மூலமாக, எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆவணப் பதிவுகளும் இன்றி பல நூறு மில்லியன் யூரோக்கள் ரொக்கமாக உலகம் முழுவதும் கைமாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பணப் பரிமாற்ற வலையமைப்பு பல நாடுகளின் குற்றச் செயல்கள் போதைப்பொருள் கடத்தல் மனித கடத்தல் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித மின்னணுப் பதிவுகளும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் உலகம் முழுவதும் பணத்தை அனுப்பப் பயன்படும் பழமையான 'ஹவாலா' பணப் பரிமாற்ற முறை இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெல்ஜிய நீதித்துறை மற்றும் ஐரோப்பிய காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் இந்த ரகசிய வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் நடந்த நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அத்துடன் ஒஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் ஹவாலா முறையைப் பயன்படுத்தி மனிதக் கடத்தலில் ஈடுபட்ட குழுக்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.