இலங்கையில் TikTok அதிரடி ; 430,357 காணொளிகள் அதிரடியாக நீக்கம்
சமூக வழிகாட்டுதல்களை மீறிய குற்றச்சாட்டில், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையில் 430,357 TikTok காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கை புதன்கிழமை (04) வெளியிடப்பட்டது.
நீக்கப்பட்ட காணொளிகளில் 99.4 சதவீதமானவை பயனர்கள் முறைப்பாடு செய்வதற்கு முன்னரே தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பதிவேற்றப்பட்ட மொத்தக் காணொளிகளில் சுமார் 0.5 சதவீதமே நீக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே கண்டறியப்பட்டு நீக்கப்பட்ட காணொளிகளில் 93.9 சதவீதமானவை பதிவேற்றப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளன.
எனினும், மீளாய்வுக்குப் பின்னர் 12,960 காணொளிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் இதே காலப்பகுதியில் 188,298,141 காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 183,344,707 காணொளிகள் தானியங்கி கண்டறிதல் தொழில்நுட்பம் மூலம் அகற்றப்பட்டுள்ளதுடன், மீளாய்வுக்குப் பின்னர் 6,262,383 காணொளிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், உலகளவில் 278,384,463 கருத்துகள் மற்றும் 146,807,400 போலிக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 13 வயதுக்குக் குறைந்தவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்பட்ட 26,840,767 கணக்குகளும் அகற்றப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட காணொளிகளில் 19.5 சதவீதம் உணர்வுபூர்வமான அல்லது முதிர்ச்சியடைந்த உள்ளடக்கங்களைக் கொண்டிருந்தன.
13.7 சதவீதம் பாதுகாப்பு மற்றும் நாகரிக விதிகளை மீறியிருந்ததுடன், 13.5 சதவீதம் ஆபத்தான செயல்கள் மற்றும் சவால்கள் தொடர்பானவையாக இருந்தன.
அதேபோன்று, 13.8 சதவீதம் உடல் வெளிப்பாடு மற்றும் பாலியல் ரீதியான நடத்தைகள் தொடர்பான காணொளிகளாகவும், 1.8 சதவீதம் திருத்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.