தமிழர் பகுதியில் இடி, மின்னல் தாக்கம் ; 10இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கம் காரணமாக 10இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை இரவு (19) இடம்பெற்ற இச்சம்பவத்தில், புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள முத்துவாப்பா லேனில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இடி, மின்னல் தாக்கத்தினால் வீடுகளின் சில பகுதிகள் மற்றும் அவற்றில் காணப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத்தின் பணிப்புரைக்கு அமைவாக, காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.என். நஜ்மி, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜரூப் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பாதிப்புகள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான சேத விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.