2027ஆம் ஆண்டில் இலங்கை அரசின் செலவினம் 4.993 டிரில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்
2027ஆம் ஆண்டில் இலங்கை அரசின் மொத்த செலவினம், 2026ஆம் ஆண்டில் பதிவான 4.434 டிரில்லியன் ரூபாவிலிருந்து 12.6 சதவீதத்தால் அதிகரித்து, 4.993 டிரில்லியன் ரூபாவாக உயரும் என CAL Research நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருடாந்த கடன் பெறும் வரம்புகளைத் தீவிரமாகக் கட்டுப்படுத்துவதுடன், மூலதன முதலீடுகளை கணிசமாக அதிகரிப்பது இந்த நிதிக் கட்டமைப்பின் முக்கிய அம்சங்களாகும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகளில், கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே அதிக வளர்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, இந்த துறைக்கான ஒதுக்கீடு 107 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் 38.6 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட இந்த ஒதுக்கீடு, 2027ஆம் ஆண்டில் 79.8 பில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு 63 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 16 பில்லியன் ரூபா, 2027ஆம் ஆண்டில் 26 பில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக CAL Research நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகளின்படி, முக்கிய உட்கட்டமைப்பு, சமூக சேவைகள் மற்றும் அரச நிர்வாகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பின்வருமாறு:
1. அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி: 9 சதவீத அதிகரிப்புடன், 596 பில்லியன் ரூபாவிலிருந்து 651 பில்லியன் ரூபாவாக உயர்வு.
2. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகம்: 6 சதவீத அதிகரிப்புடன், 555 பில்லியன் ரூபாவிலிருந்து 590.5 பில்லியன் ரூபாவாக உயர்வு.
3. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி: 12 சதவீத அதிகரிப்புடன், 446 பில்லியன் ரூபாவிலிருந்து 500 பில்லியன் ரூபாவாக உயர்வு.
04. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி: 9 சதவீத அதிகரிப்புடன், 301 பில்லியன் ரூபாவிலிருந்து 328 பில்லியன் ரூபாவாக உயர்வு.
இந்த விபரங்கள் CAL Research நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.