வெலிக்கடை சிறையில் மூன்று மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு ; குழந்தையின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணை
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவரின் மூன்று மாதப் பச்சிளம் குழந்தை, தாய்ப்பால் தொண்டையில் சிக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்ப்பால் தொண்டையில் சிக்கியது
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பில் இந்தச் சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும், குழந்தைகள் அநாதை நிலை அல்லது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதைக் குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இலங்கை பெண்கள் பணியகம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைத் திணைக்களம் ஆகியவற்றுக்கு விசேட அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.
மேலும், இவ்வாறான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது.