பசிலிற்கு எதிராக மூன்று அமைச்சர்கள் போர் கொடி
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை மீறிச் செயற்பட்டார் என ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
யுகதெனவ் மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது தமது தரப்பு சட்டத்தரணிகள் ஊடாக அமைச்சர்கள் இந்த விடயத்தை நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த எகலஹேவா, அமைச்சர்களின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை பத்திரமொன்று தொடர்பில் அமைச்சர்களினால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை கூட்டுப் பொறுப்பினை மீறும் செயல் என அமைச்சரவையின் செயலாளர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அரசியல் அமைப்பின் 41(3) மற்றும் 45(3) ஆகிய சரத்துக்களை மீறும் வகையில் அமைச்சர்கள் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், யுகதெனவ் மின் நிலையம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவே இல்லை எனவும் இதனால் இந்த விடயத்தில் கூட்டுப் பொறுப்பினை மீறியது நிதி அமைச்சரேயாகும் எனவும் வாசு, விமல் மற்றும் உதய சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.