அரச காணியை அபகரிக்க முயன்ற மூவர் கைது
வவுனியா, புளியங்குளம் வடக்கில் இரண்டு ஹெக்டேயர் அரச காணியை அபகரிக்க முற்பட்ட மூவரை புளியங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் உள்ள இரண்டு ஹெக்டேயர் அரச காணியை நேற்று பலர் அபகரிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும், அவ்வாறு முயற்சித்தவர்கள் அரசியல் கட்சியின் பின்னணியில் இயங்குவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அரச காணி அபகரிப்பு தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, புளியங்குளத்தில் அரச காணியை அபகரிக்க முற்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர்கள் மூவர் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.