வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்; ஐவர் கைது
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் தகராறு
சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் களுத்துறை பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் முதலில் கைதுசெய்யப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய ஏனைய மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு பிரதேசங்களில் நபர்களை தாக்குதல், அச்சுறுத்துதல் மற்றும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 5 கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.