ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் ; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
சுமார் ஒரு வாரகாலமாக நீடித்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது சந்தையில் நிலவிய ஊகங்கள் மற்றும் அநாவசிய அச்சத்தின் காரணமாக உருவான 'மிகைக் கேள்வியினால்' ஏற்பட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் ரூபாவின் பெறுமதியில் நிலவிய தளம்பல் நிலை சீரமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்நியச்செலாவணி
அதன்படி கடந்த வாரம் பதிவான அந்நியச்செலாவணி விகித மாற்றங்கள் பொருளாதார அடிப்படைகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் தோற்றம்பெற்றவை அல்ல எனவும், மாறாக அவை சந்தையில் நிலவிய ஊகங்கள் மற்றும் அநாவசிய அச்சம் காரணமாக ஏற்பட்டவை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதுமாத்திரமன்றி இதன்போது அந்நியச்செலாவணி சந்தையின் இரு முக்கிய பிரிவுகளான வங்கிகளுக்கு இடையிலான சந்தை மற்றும் சில்லறை சந்தை ஆகியவற்றுக்கு இடையே உருவான இடைவெளி குறித்தும் ஆளுநர் விளக்கமளித்தார்.
குறிப்பாக 'அந்நியச்செலாவணி விகிதம் குறித்து நிலவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சில ஊகங்களின் காரணமாகப் பதற்றமடைந்த இறக்குமதியாளர்கள் தமக்கு அவசியமான டொலர்களை தாம் விரும்பிய அல்லது இயலுமான விலைகளில் கொள்வனவு செய்தனர்.
அதன்விளைவாக சந்தையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதுடன், ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்தது' என அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியின் தலையீடு மற்றும் திறைசேரியுடன் ஒருங்கிணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம் தற்போது ரூபாவின் பெறுமதி வழமை நிலைக்குத் திரும்பியிருப்பதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.