வெளிநாட்டுப் பண அனுப்புதல் தொடர்பில் வெளியான தகவல்
இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கை வரலாற்றில் அதிகூடிய வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்புதலைப் பெற முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் கிடைத்த 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 3.06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த சாதகமான வளர்ச்சியின் மூலம், இவ்வருட இறுதியில் ஒட்டுமொத்த பண அனுப்புதல் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பள உயர்வு, புதிய அரசாங்கத்தின் சாதகமான நடவடிக்கைகள் காரணமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் மற்றும் தொழிலாளர்களுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை ஆகிய காரணங்களால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.