நாட்டில் இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்....விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மக்கள் தேவையின்றி எரிபொருளை சேமிப்பதன் காரணமாக நாட்டில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்குமாறும், மசகு எண்ணெய்யை நாட்டுக்கு கொண்டுவருமாறு எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியம் போராட்டம் நடத்தியது. மேலும் அந்நிய செலவாணியை கட்டுக்குள் பயன்படுத்த மசகு எண்ணெய் இறக்குமதியானது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக டொலர் அதிகரித்து மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்ய வாய்ப்பிருக்குமென தெரிந்திருந்தால் தானும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருப்பேன். காரணம் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடியை சந்தித்துள்ள இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படவில்லை. இதுதொடர்பில் தொழிற்சங்கங்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அதேபோன்று தொடர்ச்சியான மழைவீழ்ச்சி கிடைப்பதால் மின் உற்பத்திக்காக மின்சார சபையும் எம்மிடம் அதிகளவு எரிபொருள் கொள்வனவு செய்வதில்லை.
டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மசகு எண்ணெய்யினால் தயாரிக்கப்பட்ட 13,500 எரிபொருளை பயன்படுத்தாமல் தாங்கிகளில் சேமித்து வைத்துள்ளோம்.
மேலும் மசகு எண்ணெய் இறக்குமதியானது தடைபட்டால் மின்சார தடை ஏற்பாடு எனக் கூறுவது வெறும் வதந்தியே" என அவர் தெரிவித்துள்ளார்.