பொகவந்தலாவை கல்லூரிக்குள் வௌ்ளம்; நாளை உயர்தர பரீட்சை நடைபெறுமா?
பொகவந்தலாவை பகுதியில் இன்று (20) பெய்த கடும் மழையினால், சென்மேரிஸ் தேசிய கல்லூரிக்குள் வௌ்ளநீர் புகுந்துள்ளது.
கெசல்கமுவ ஓயாவிற்கு நீரினை ஏந்தி செல்லும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கல்லூரி வளாகத்தினுள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

நாளை உயர்தர பரீட்சை நடைபெறுமா?
கல்லூரி வளாகம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தமையால், நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் தரப் பரீட்சைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மண்டபமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் சுந்தரேசன் தெரிவித்தார்.

அதேவேளை த ஆற்றை அகலப்படுத்தித் தருவதாகக் கூறி கடந்த காலங்களில் 'பெக்கோ' இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், பணிகள் முறையாக முன்னெடுக்கப்படாமல் அவை திருப்பி அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் கல்லூரிக்கு அருகிலுள்ள இந்த ஆற்றை அகலப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
