மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையை மாற்றியமைத்த திருக்கேதீஸ்வர இளைஞர் அணி!
மன்னர் மாவடட அரசாங்க அதிபரினால் எடுக்கப்படட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தீர்மானத்தை திருக்கேதீஸ்வர இளைஞர் அணியினர் மாற்றியமைத்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவு, பெரும்பாலான தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலக பிரிவாகவும், தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும், இந்து மக்களின் புனிதஸ்தலமும், கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமுமான திருக்கேதீஸ்வரமும் இருக்கின்ற பிரதேச செயலக பிரிவாக இருக்கின்றது.
தற்போது குறித்த பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளராக எஸ்.கேதீஸ்வரன் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பிருந்தே தற்போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளராகப் பதவி வகிக்கும் எஸ்.கேதீஸ்வரனை இடமாற்ற வேண்டுமென சக ஊழியர்களிடம் கூறி வந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமெல், சில தினங்களுக்கு முன் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு முஸ்லிம் பிரதேச செயலாளர் ஒருவரைப் பரிந்துரை செய்திருந்தார்.
இதனையடுத்து மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்குள் சலசலப்பு நிலை ஏற்பட்டது. தற்போது பதவி வகித்து வருபவர் ஒரு தமிழர் அவரே தொடர்ந்து இருக்கலாம், அல்லது மாற்றம் தேவையென்றால் வேறொரு தமிழரை நியமிக்கலாம், அதைவிடுத்து தமிழ் பெண்ணாக இருக்கும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது, அவரது எதிர்கால நலன் கருதிய சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
தவிர புதிதாக நியமிக்கப்படுவர் இந்து மக்களின் தொன்மை வாய்ந்த புனிதத்தலமான திருக்கேதீஸ்வரத்தை பாதுகாக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று விசனம் வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், இது தொடர்பில் மாலை மரியாதைக்கும், பணத்திற்கும் விலை போகும் திருக்கேதீஸ்வர நிர்வாகம் தற்போது எங்கே எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமெலின் பரிந்துரையை எதிர்த்து தேசியப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவை திருக்கேதீஸ்வர இளைஞர் அணி திடீரென அதிரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதனையடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்கள் குழப்பமடையாதவாறு சரியான பரிந்துரையொன்றை முன்வைக்குமாறு அ.ஸ்ரான்லி டிமெலுக்கு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.