இந்த உணவுகளை எப்போதும் இதனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்
உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் தினமும் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வகையில் சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஒருசில உணவுகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.
ஆனால் ஒருசில உணவு சேர்க்கைகள் உடலில் மிகுந்த அசௌகரியங்களை ஏற்படுத்தி பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
ஒருவர் தங்களின் உணவில் பலவிதமான உணவுகளை சேர்த்து உண்ணும் போது அது ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
அதே சமயம் தவறான உணவுச் சேர்க்கைகளை உண்ணும் போது அதனால் நன்மைகள் கிடைப்பதற்கு பதிலாக தீங்கை சந்திக்க நேரிடும்.
உதாரணமாக மீன் மற்றும் பாலை ஒன்றாக உட்கொள்ளக்கூடாது என்று கேட்டிருப்போம்
பழங்களுடன் பிற உணவுகள்
பெரும்பாலானோர் சுவைக்காக ஒருசில பழங்களை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.
ஆனால் பழங்களை எப்போதும் மற்ற உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அப்படி உட்கொள்ளும் போது, அதன் விளைவாக செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எப்போதுமே பழங்களை தனியாகத் தான் சாப்பிட வேண்டும்.
இது தவிர, பழங்களை சாப்பிடுவதற்கும், உணவுகளை உண்பதற்கும் இடையில் போதுமான இடைவெளியிட விட வேண்டும்.
கொழுப்புள்ள இறைச்சி மற்றும் சீஸ்
சீஸ் மற்றும் கொழுப்புள்ள இறைச்சிகளை ஒன்றாக உட்கொண்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.
இப்படி அதிகரித்தால் அது இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.
எனவே எப்போதும் இவ்விரு உணவுப் பொருட்களையும் ஒன்றாக உட்கொள்ளதீர்கள்.
பால் மற்றும் சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் அமிலங்கள் உள்ளன. இந்த சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை பாலுடன் சேர்க்கும் போது அது பாலை திரியச் செய்து செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
எனவே பாலையும், சிட்ரஸ் பழங்களையும் ஒன்றாக உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
அதோடு எப்போதும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், 2 மணிநேர இடைவெளி விட்டு பின் பாலைக் குடியுங்கள்.
இரும்புச்சத்து மற்றும் கால்சியம்
இரும்புச்சத்து மற்றும கால்சியம் ஆகிய இரண்டுமே உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும்.
ஆனால் இவ்விரு சத்துக்களையும் ஒன்றாக உட்கொண்டால் அந்த சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படாமல் போகும்.
எனவே இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்பட வேண்டுமானால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் உட்கொள்ளுங்கள்.
அதே சமயம் கால்சியத்தை உறிஞ்ச வைட்டமின் டி நிறைந்த உணவுகளுடன் உட்கொள்ளுங்கள்.
மீன் மற்றும் பால்
பால் பொருட்களை எப்போதும் எந்த ஒரு இறைச்சியுடனும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக மீன் உட்கொண்டதும், பாலை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால் அது செரிமான செயல்பாட்டை மோசமாக பாதித்து கடுமையான செரிமான பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.