இலங்கையில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இல்லை
நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நிபா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தயார் நிலையில் உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, தெரிவித்தார். எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை நாட்டில் உரியவாறு பேணிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களிடையே காலத்திற்கு காலம் ஏற்படும் வைரஸ் தொற்றுகள் தொடர்பில் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் ஊடாக தொடர்ச்சியாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அதனூடாக பெறப்படும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தேவையான மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை நாட்டுக்கு தற்போது இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
எனினும், இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிபா வைரஸ் தொற்று குறித்து எவ்வித அச்சங்களும் பொதுமக்களுக்கு ஏற்பட தேவையில்லை எனவும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.