புதிதாக திருமணமானவர்களுக்கு காணி இல்லை; வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை!
மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சனைக்கு வடக்கு மாகாண ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள நறுவிலிக்குளம் சித்த வைத்தியசாலைக்கு முன் பக்கமாக உள்ள அரச காணியினை நறுவிலிக்குளம் கிராமத்தில் புதிதாக திருமணம் முடித்த குடும்பத்தினர்களுக்கு வழங்குமாறு பல வருடங்களாக வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பல வருடங்களாக தீர்க்கப்படாமல் காணிப் பிரச்சனை
எனினும் எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அயல் கிராமத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு காணி வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வடமாகாணம் வரை கடிதம் அனுப்பியும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. எனவே வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை நாங்கள் நம்பி உள்ளோம்.
ஆளுநர் அவர்கள் இந்த காணி விடயம் தொடர்பில் தீர விசாரித்து நறுவிலிக்குளம் கிராமத்தில் புதிதாக திருமணம் முடித்து காணிகள் இல்லாமல் பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் காணிகள் இல்லாத இளம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.