நீதிமன்ற கோப்பு திருட்டு; இருவர் உடனடி பணி நீக்கம்
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காணி வழக்கு ஒன்றின் கோப்பு திருடப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ், நீதிமன்ற ஆவண அறையில் கடமையாற்றும் இரண்டு முகாமைத்துவ உதவியாளர்கள் உடனடியாகச் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிச் சேவை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, அவ்விரு அலுவலர்களையும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யும் உத்தரவைத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை (03) பிறப்பித்தது.

நீதிமன்றக் கோப்பைத் திருடிய குற்றச்சாட்டுக்கு உள்ளான முகாமைத்துவ உதவியாளர்களில் ஒருவரான ஆண் ஊழியர், ஏற்கனவே திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீனின் உத்தரவிற்கு அமைய, எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் முகாமைத்துவ உதவியாளர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.