வரலாற்றுப் புகழ்பெற்ற அனுராதபுர விகாரையில் பெண் கான்ஸ்டபிளுக்கு பாலியல் துன்புறுத்தல்!
அனுராதபுரம் வரலாற்றுப் புகழ்பெற்ற ஜெய ஸ்ரீ மகா போதி விகாரை வளாகத்தில் வைத்து, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய கைப்பேசியை , அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அல்லது விசேட நிபுணர் பரிசோதகரிடம் அனுப்பி அறிக்கை கோருமாறு அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

விகாரை வளாகத்திற்குள் பாலியல் துன்புறுத்தல்
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு அனுராதபுர பிரதான நீதவான் , அனுராதபுர கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி, ஜெய ஸ்ரீ மகா போதி விகாரை வளாகத்திற்குள் வைத்து குறித்த பெண் காவலருக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் காவலர், உடனடியாக உடமலுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குத் தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளார். அந்த உரையாடலின் ஒலிப்பதிவை பரிசோதித்து, அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே தற்போது நிபுணர் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சந்திர சுமிந்த ஹேவா பதினிகே என்ற அதிகாரி மீதே இக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகத் தாமதித்துள்ளனர். கடந்த 2024 டிசம்பர் 02 ஆம் தேதியே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர்
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவரை, வரும் ஜூலை மாதம் 07 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அதிகாரிகளுக்கு வழக்கமாகப் பணி இடைநீக்கம் விதிக்கப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் செயல்பட்ட விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலையாபத்துவ பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் ஒரு மாதத்திற்குள் அவர் மீண்டும் அதே உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி அதே பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றுவதால், மற்ற அதிகாரிகள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.
இந் நிலையில் அரசாங்க நிபுணர் பரிசோதகரின் அறிக்கை கிடைத்த பின்னர், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.