அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி திருட்டு; அர்ச்சகர் கைது!
நோர்வூட் - டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தாலிக்கொடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோவில் உண்டியலும் களவாடப்பட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று மாலை (9) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகத்தின் பேரில் ஆலய பூசகர் கைது
ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கதவு உடைக்கப்பட்டிருப்பதை இன்று காலை கண்ணுற்ற ஆலய நிர்வாகம், இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் , தடயவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெடுக்கபப்ட்ட தேடுதல் வேட்டையின்போது ஆலயத்தின் உண்டியல், கத்தி என்பன தேயிலை மலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
தேடுதல் வேட்டையில் பொலிஸ் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய் உண்டியல் இருந்த தேயிலை மலையில் இருந்து வந்து, முத்துமாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சென்று அமர்ந்து கொண்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஆலயத்தின் பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.