யாழில் பரீட்சையில் இருந்து திரும்பிய மாணவிகள் மீது சேட்டை விட்ட இளைஞர்கள்
யாழில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் புதன்கிழமை (31) மதியம் இடம்பெற்ற இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன், பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் நின்ற இரு இளைஞர்கள் சேட்டை விட்டுள்ளனர்.
அவ்வேளை பரீட்சை எழுதி விட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்க முற்பட்டபோது, இருவரும் மாணவனை தலைக்கவசத்தால் மூர்க்க தனமாக தாக்கி தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளால் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அவருடன் சென்ற மற்றைய நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு நடவடிக்கை
அதேவேளை யாழ் மாவட்டத்தில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் கூடும் இளைஞர்கள் மாணவிகளுடன் பல்வேறு விதமான சேட்டைகளை புரிவதாகவும் , மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதனை தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.