அனுர கோ ஹோம் ; ரணில் ஆதரவாளர்கள் கோக்ஷம்!
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ என கோக்ஷங்களை எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போது தொடங்கிவிட்டது என்று கூறினார்.
ஹிருணிகா பிரேமசந்திர , ஆசு மாரசிங்கவை தடுத்த பொலிஸார்
இந்த அடக்குமுறை ஊர்வலத்திற்கு அதிக ஆயுள் இல்லை என்றும் கவிந்த ஜெயவர்தன கூறினார்.
இதேவேளை, நீதிமன்றத்துக்கு வருகைதந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோரை பொலிஸார் நீதிமன்றத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை .
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற வழக்கு விசாரணை அறையில் பிரசன்னமாகியுள்ளனர்.
500 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, ரணில் விக்கிரமசிங்க இன்றி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள அறையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 500 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்திலும் பொதுமக்கள் வந்து கூடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஏதாவது அசாதாரண நிலை ஏற்படுமாயின், அதனை தடுப்பதற்காக பொலிஸ் நீர்த்தாரை பிரயோக வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.