பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன் ; விசாரணைகளில் புதிய திருப்பம்
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படும் நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த தினத்தில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு 5 சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கையை பரீசிலித்ததன் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய குறித்த இளைஞரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, 3பேர் கொண்ட மருத்துவ குழாமினால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளது.
அத்துடன், பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட மாதிரிகள் தலைமை தடயவியல் மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இந்த மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது 22 சாட்சியாளர்களிடம் இருந்து சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாகவும், அவர்களில் 5 சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.