யாழ் நல்லூர் நீர்க் கண்காட்சி; பலரது கவனத்தை ஈர்த்த விழிப்புணர்வு நாடகம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சிலைக்கருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்றைய தினம் 02.03.2026 நல்லூர் நீர்க் கண்காட்சி மூன்றாவது முறையாக ஆரம்பமானது.
குறித்த நிகழ்வின் முக்கிய அம்சமாக செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "நீர் தான் நீரே தான்" நாடக ஆற்றுகை பலரது கவனத்தையும் ஈர்த்தது. வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட நீர்வள அதிகாரிகள், நீர் ஆர்வலர்கள் குறித்த நாடகத்தை பார்வையிட்டனர்.

கடல் நீர் உட் புகும் அபாயம்
பொதுக் கிணறுகளில் ஊரிலுள்ள குடும்பங்கள் தண்ணீரை பகிர்ந்து அளவாக பயன்படுத்திய காலம் போய், வீட்டுக்கொரு கிணறு மூலம் அளவாக வாளிகளில் தண்ணீரை அள்ளிய காலமும் கடந்து,
இன்று காணிகளை சிறு சிறு துண்டுகளாக பிரித்து ஒவ்வொரு காணிக்கும் ஒரு குழாய்க்கிணறு அடித்து சமூகப் பொறுப்பின்றி நிலத்தடி நீரை வேண்டியளவுக்கு உறிஞ்சுவதால் கடல் நீர் உட் புகும் அபாயம் தொடர்பிலும், அதனூடாக வரும் விளைவுகளையும் தத்ரூபமாக குறித்த நாடகம் பதிவு செய்திருந்தது.

நாடகம் முடிவடைந்த பின் குறித்த நாடக உருவாக்கத்தினை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். குறித்த நீர்க் கண்காட்சியின் பாரம்பரிய ஊருணி அரங்கில் 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7 மணி முதல் பல்வேறு கலை நிகழ்வுகளும், கருத்துரைகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
