இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன
இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறிகையில்,
25 வருடங்களுக்கு பின் உண்மைத்தன்மை
செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள்.
இந்த மனிதப் புதைகுழியில் இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.
இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரட்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் அக்கால பகுதியில் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தற்போது தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இப்போது கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரட்ன ராஜபக்ஷ சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது.
அவர் 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டன என்றும் அதிலே இராணுவ மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் அப்போது சொன்ன விடயம் கால் நூற்றாண்டுக்கு மேலாக அதாவது, 25 வருடங்களுக்கு பின்னர் இப்போது அதனுடைய உண்மைத்தன்மை வெளிப்படுகிறது.
நான் பல தடவைகள் முன்னரே சொல்லி இருந்ததைப் போல உண்மை கண்டறியப்படுகிற பொறிமுறைமை குறித்து நாங்கள் பேசுகின்ற போது, இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் இந்த உண்மைகள் பல புதைக்கப்பட்டு இருக்கின்றன.
ஆகவே இந்த மனிதப் புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம், உண்மை கண்டறியப்படுகிற செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது. பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன.
இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில், கொக்குத்தொடுவாய் மற்றும் மாத்தறையில் நடந்ததை போல இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள், கேள்விகள் பலருக்கு இருக்கிறது. வேண்டுமென்றே தமிழ் மக்கள் ஒரு இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தற்கால சான்றுகள் இங்கே இருந்து ஆரம்பமாகிறது போலவும் தோன்றுகிறது.
ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்வது இதிலே முழுமையான வெளிப்படைத் தன்மையோடும் சர்வதேச மேற்பார்வையோடும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். ஆகையினாலே திரும்பவும் ஒரு சர்வதேச பொறிமுறை இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கும் செம்மணி வழக்கை இங்கே இடமாற்ற வேண்டும்.
இங்கே இருந்த வழக்கை அப்பொழுது சந்தேக நபர்களாக இருந்த இராணுவத்தினர் இங்கே பாதுகாப்பு போதாதென்று கூறி அனுராதபுரத்திற்கு மாற்றி பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கே வழக்கு நடைபெற்று வருகிறது. ஆகையினாலே அந்த வழக்கு இங்கே திரும்பவும் கொண்டுவரப்பட்டு இந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.