அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லை ; வடக்கிற்கு தேவையில்லை
இலங்கையில் அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்து வந்திருந்த அனுர அரசு அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்துள்ளது.
”2025ஆம் ஆண்டின் நடுபகுதியாகும் போது கொழும்பு துறைமுகத்தில் மேலும் இரண்டு புதிய முனையங்கள் தமது செயல்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அவற்றின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம் என அரச அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதானி நிறுவனத்தின் முதலீடு தொடர்பில் இலங்கையில் உள்ள பிரச்சினையானது மன்னார் காற்றாலைத் திட்டமாகும்.
அதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். ஜனாதிபதி அதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளதுடன், நீதிமன்றத்துக்கும் அறிக்கையிட்டுள்ளோம். அத்திட்டம் இலங்கைக்கு பாதகமானது.
அதானி குழுமம் அபிவிருத்தி செய்யும் கொழும்பு மேற்கு முனையம் தொடர்பிலான விவகாரத்தில் அவர்களுக்கு நிதியை அளிக்கும் அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளனர். அவர்களது நிதியில் இதனை செய்வதாக கூறியுள்ளனர்.
அதனால் அதானி நிறுவனம் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும். கொழும்பு துறைமுகத்தின் பெரும்பான்மையான பகுதி துறைமுக அதிகார சபைக்கு உட்பட்டதுதான். ஆனால், வேறு சில நிறுவனங்களும் தற்போது பணிபுரிகின்றன.
துறைமுகத்தில் எதனையும் நாம் தனியாருக்கு விற்பனை செய்யவில்லை. ஆனால், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பல விடயங்கள் உள்ளன. அதனால் விற்பனை செய்யப்பட்ட விடயங்களின் செயற்றிறனை அதிகரிக்க வேண்டும்.
அதற்குத் தேவையான உதவிகளை செய்ய முடியும் என்பதுடன், அதன் ஊடாக நாட்டுக்கு பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.