யாழில் பரவி வரும் மர்ம காய்ச்சல் ; சுகாதார அமைச்சு உறுதி
யாழில் பரவி வரும் மர்ம காய்ச்சல் எலிக்காய்ச்சல் என சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகள் மூலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் இரத்தமாதிரி பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களில் சிலர் எலிக்காய்ச்சலால் தான் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.
உயிரிழந்த 7 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பரவிய எலிக்காய்ச்சல் தொடர்பில் நேற்று (11) ஊடகவியலாளர்கிடம் பேசிய வைத்தியர் சத்தியமூர்த்தி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் உயிரிழந்தவர்கள் 20 - 65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.