CIDஇன் 5 ஆவது மாடியில் பெண் தற்கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
குற்றப் புலனாய்வு திணைக்கள கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து பெண்ணொருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (10) அழைத்து வரப்பட்ட குறித்த பெண் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
பன்னிபிட்டி பகுதியைச் சேர்ந்த அப்சரா மெனிக்கே என்ற 46 வயதான குறித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த பெண் இராஜகிரிய, அங்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வெவ்வேறு சங்கங்களை ஆரம்பித்து 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவர் காவல்துறையினரை ஏமாற்றி வெவ்வேறு பெயர்களில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் இன்று (11) காலை கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட இருந்த நிலையில், அதன்போது அவர் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என கூறியதை அடுத்து, அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவர் கழிப்பறைக்கு அருகில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் தமது கடமையை புறக்கணித்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பொது பயன்பாட்டுக்காக இருந்த கழிப்பறைகளை பயன்படுத்தாமல், உயர் காவல்துறை அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கழிப்பறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரது சடலம் தற்போது காவல்துறை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
கொழும்பு CID 5வது மாடியில் பெண்ணொருவர் திடீர் முடிவு! அதிர்ச்சியில் அதிகாரிகள்