அரசின் திட்டமற்ற வாகன இறக்குமதி ; நாட்டில் ஏற்படப்போகும் அபாயம்
இலங்கையில் அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நெரிசல் காரணமாக பேருந்துகளின் எரிபொருள் செலவு உயருவதுடன், ஒரு நாளைக்கு இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதன் விளைவாக, பேருந்து உரிமையாளர்கள் இத்தொழிலில் இருந்து வெளியேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து கொட்டாவைக்கு 5 தடவைகள் சேவை வழங்கிய பேருந்துகள் தற்போது 3 தடவைகள் மட்டுமே செல்ல முடிகிறது. அத்துடன், முன்னரை போல ஒரு மணிநேரத்தில் பயணித்த வேகத்தைக்கூட எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால், மக்கள் கால்நடையாகவும் செல்ல முடியாத நிலை ஏற்படும் என கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த வாகன நெரிசல் காரணமாக ஆண்டுக்கு சுமார் 1,000 பில்லியன் ரூபாய் பெறுமதியான எரிபொருள் வீணடிக்கப்படுவதாக ஒரு கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.