கொட்டித் தீர்க்கும் மழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் அக்கரைப்பற்று
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இன்று (25) அன்று காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் அக்கரைப்பற்றில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக 146.1 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலைய கண்காணிப்பாளர் ஏ.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.

தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம்
அம்பாறை பிரதேசத்தில் 114.03 மில்லிமீற்றரும், இலுக்குச்சேனை நீர்ப்பாசன குளத்தில் 101.6 மில்லிமீற்றரும், இங்கினியாகல நீர்ப்பாசனக் குளத்தில் 100.0 மில்லிமீற்றரும், தீகவாபி பிரதேசத்தில் 98.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்தவகையில் பொத்துவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திருக்கோயில், லகுகல, பாணம, அம்பாறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழையினால் அநேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ள தோடு, உள்ளூர் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை தாம் போதிகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பெருக் கெடுத்துள்ளன.
கொட்டித்தீர்க்கும் மழையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, மழை நீர் தேங்கியுள்ள வடிகால்களை துப்புரவு செய்து மழை நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து நீரைவடிந்தோடச் செய்ய உள்ளுராட்சி மன்றங்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.