24 மணி நேரத்தில் வலுப்பெறவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்; மக்களே அவதானம்
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதால் பலத்த மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (25) முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்தநிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.