புதிதாக அறிமுகமாகும் ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடர்
ஐ.பி.எல் போன்று இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி தொடங்கி 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
ஏலத்தொகை
இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவிப் பணியாளர்கள் 6 பேர் இருக்கலாம்.
ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் (இந்திய ரூபா )ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக ( இந்திய ரூபா )நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடரின் குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.