முருங்கை விதைகளின் அதிசய திறன் ; உலக நீர் பாதுகாப்புக்கு புதிய வழி
முருங்கை மரத்தின் விதைகளுக்கு, குடிநீரில் உள்ள PVC மைக்ரோபிளாஸ்டிக் (Microplastics) துகள்களை 98.5% வரை அகற்றும் தனித்துவமான திறன் உள்ளதாக பிரேசில் மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையின்படி, நீரைச் சுத்திகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கை இரசாயனங்களுக்கு இணையான ஆற்றலுடன் முருங்கை விதைகள் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்பு
முருங்கை விதைகள் ஒரு "உறைவியாக" (Coagulant) செயற்பட்டு, நீரில் உள்ள மிகச்சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை ஒன்றோடொன்று ஒட்டச் செய்கின்றன.

இதன் மூலம் அத்துகள்கள் அளவில் பெரியதாகி, மிக எளிதாக வடிகட்டி அகற்றக்கூடிய நிலைக்கு மாறுகின்றன. மனிதத் தலைமுடியின் தடிமனில் நான்கில் ஒரு பங்கு அளவுள்ள மிகச் சிறிய துகள்களைக் கூட இதன் மூலம் அகற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
தற்போது நீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் 'அலுமினியம் சல்பேட்' போன்ற இரசாயனங்கள் நரம்பியல் நோய்களுக்குக் காரணமாகலாம் என அஞ்சப்படும் நிலையில், முருங்கை விதைகள் நச்சுத்தன்மையற்ற மற்றும் இயற்கையாக மட்கக்கூடிய மாற்றாகக் கருதப்படுகிறது.
ஒரு முருங்கை விதை மூலம் சுமார் 10 லீட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும். இந்த முறையானது தற்போது சிறிய சமூகங்களுக்கு அல்லது இரசாயனப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளச் சிரமமான பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் சுமார் 83% குழாய் நீரில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்துள்ள நிலையில், இத்தகைய இயற்கையான தீர்வு சுகாதாரத் துறையில் ஒரு பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.