நள்ளிரவில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் ; பறிபோனது சிறுவனின் உயிர்
களுத்துறை, கமகொடபர, ராஜாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் நடத்திய தாக்குதலில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த குழந்தையும், வீட்டில் இருந்த 28 வயதுடைய பெண்ணும் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கான நோக்கம்
அவர்கள் இருவரும் களுத்துறை போதனா மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டதுடன், படுகாயமடைந்த சிறுவன் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று (30) மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த குழந்தையின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதனால் குழந்தையின் தந்தை வேலையிலிருந்து திரும்பும் வரை பெட்ரோல் குண்டுத் தாக்குதலுக்கு ஆளான வீட்டில் இருந்த பெண்ணே குழந்தையைப் பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் தற்போது களுத்துறை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தாக்குதல் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, என்பதுடன் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.