வரித் திருத்தங்கள் தொடர்பில் வெளியான அறிக்கை
இன்று முதல் அமுலாகும் வகையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரிக்கான வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தனிநபர் வரி விதிப்புக்கு உட்படும் மாதாந்த வருமான வரம்பு 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்த வருமானம் ஈட்டும் பலர் வரி நிவாரணத்திற்கு தகுதி பெறுவார்கள் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 18 இலட்சம் ரூபாவுக்கு குறைவான வருடாந்த வருமானத்தை பெறுபவர்கள், முன்கூட்டிய வருமான வரி அறவீட்டிலிருந்து நிவாரணம் அல்லது வைப்புத்தொகைக்கு கழிவு பெறமுடியும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த வரி நிவாரணத்தைப் பெற விரும்பும் நபர்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்த வரி தொடர்பான ஆலோசகர் சக்திவேல், இதுவரையில் 5 சதவீதமாக காணப்பட்ட முன்கூட்டிய வருமான வரி இன்று முதல் 10 சதவீதமாக உயர்த்தப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வற் வரி தொடர்பான சட்டம் இதுவரையில் அமுலாக்கப்படாமையினால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் இன்று முதல் வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் வரி தொடர்பான ஆலோசகர் சக்திவேல் தெரிவித்தார்.