வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சர்வதேச நாணய நிதியம்
இலங்கையில் அண்மைக் காலமாக விலைகள் மற்றும் ரூபாவின் மதிப்பு ஸ்திரமடைந்துள்ளமையானதுஇ மத்திய வங்கியின் எச்சரிக்கையுடனான பணவட்டுக் கொள்கையின் விளைவே தவிர, "கட்டுப்பாடற்ற பண அச்சிடலால்"ஏற்பட்டதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் இவான் பாபகோர்ஜியு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் 60-70 சதவீதம் வரை உயர்ந்திருந்த பணவீக்கம், தற்போது குறைந்த ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக கடந்த மாதம் தற்காலிக உயர்வொன்றைக் காட்டியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான திட்டத்தின் கீழ்இ புதிய பணத்தை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் பாதீட்டுப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதை இலங்கை மத்திய வங்கி தற்போது நிறுத்தியுள்ளதாக பாபகோர்ஜியு வலியுறுத்தினார்.
மத்திய வங்கியின் 5 சதவீத பணவீக்க இலக்கிற்கு இணங்கவே கொள்கை வட்டி விகிதங்கள் பேணப்பட்டு வருவதாகவும், இது விலை ஸ்திரத்தன்மையைத் தக்கவைப்பதற்குப் பொருத்தமானது என்றும் அவர் விபரித்துள்ளார்.
தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலான பண விரிவாக்கம் எதுவும் இடம்பெறவில்லை, அதாவது மத்திய வங்கி பொருளாதாரத்திற்குள் அதிகப்படியான பணப்புழக்கத்தை செலுத்தவில்லை என கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் நாணய மாற்று விகிதம் குறித்து கருத்துத் தெரிவித்த பாபகோர்ஜியு, நாணய மாற்று விகிதத்தைக் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காமல், உலகளாவிய அதிர்ச்சிகளுக்கு ஏற்ப அது மாறுபட அனுமதிக்கப்படுகிறது.
இதன் மூலம், மத்திய கிழக்கு மோதல் போன்ற உலகளாவிய நிகழ்வுகளின் அழுத்தம் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை பாதிக்காமல் அல்லது திடீர் கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தாமல், நாணய மாற்று விகிதத்தின் மூலமாகவே ஓரளவிற்கு உள்வாங்கப்படுகிறது.
இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்பைத் தொடர்ந்து கட்டியெழுப்பி வருவதாக பாபகோர்ஜியு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களுடன் தொடர்புடைய சந்தை ஏற்ற இறக்கங்களைச் சீரமைப்பதற்காக மத்திய வங்கி தலையிட வேண்டியிருந்ததால், சமீபகாலமாக கையிருப்பு சேகரிப்பின் வேகம் சற்று குறைந்துள்ள போதிலும், அது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், ஒட்டுமொத்த கொள்கை திசையானது சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதற்கு இணங்கவே உள்ளது.
இதன்படி, தற்போதைய பணவியல் நிலைப்பாடு "பரந்தளவில் பொருத்தமானது" என்றும், பணவீக்கம் இந்த ஆண்டும் நடுத்தர காலத்திலும் 5 சதவீத இலக்கை ஒட்டி இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
"உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு போன்ற உண்மையான பொருளாதார அதிர்ச்சிகள் நாட்டைத் தாக்கும் போது, வெளிநாட்டு அதிர்ச்சிகளுக்கு எதிரான 'முதல் பாதுகாப்பு அரணாக' ரூபா செயல்பட வேண்டும் என்று இவான் பாபகோர்ஜியு குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சூழ்நிலைகளில், நாணய மாற்று விகிதத்தை நிலையானதாக வைத்திருக்க முயன்று பின்னர் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட, ரூபாவின் மதிப்பில் மாற்றங்களை அனுமதிப்பதே பொருத்தமானது.
அத்துடன், ரூபாயின் மதிப்பை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற அனுமதித்து, ஸ்திரத்தன்மை மற்றும் பணவீக்கக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தும் தற்போதைய அணுகுமுறை இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஒரு "பொருத்தமான பதில் நடவடிக்கை" என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் இவான் பாபகோர்ஜியு தெரிவித்துள்ளார்.