தீவிரவாதிகளா? யாழில் பாகிஸ்தான் இளைஞர்களால் பரபரப்பு!
யாழ்ப்பாணத்திற்கு வியாபார நோக்கத்தில் வந்த இரு பாகிஸ்தான் இளைஞர்களை பொதுமக்கள் தீவிரவாதி என சந்தேகப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படத்த நிலையில் விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தலைதெறிக்க ஓடிய இளைஞர்
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியிலுள்ள கடையொன்றில் இருவர் பொருட்களை கொள்வனவு செய்து 5,000 ரூபா தாளை அவர்கள் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் , பணத்தை தருமாறும், தாம் வாங்கிய பொருட்களை மீள ஒப்படைப்பதாகவும் அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர்.
இதனால், அவர்கள் கள்ளநோட்டு கும்பலாக இருப்பார்களோ என கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது பொது மக்களும் குவிந்துள்ளனர்.
இதன்போது இரு இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடி விட மற்றையவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பாகிஸ்தான் நாட்டவர் என்பது தெரிய வந்தது.
பொலிசார் வந்து அந்த இளைஞனை பொறுப்பேற்று விசாரணை நடத்தியதில், பாகிஸ்தானை சேர்ந்த இருவரும் வர்த்தக நோக்கத்துடன் வந்திருந்ததும், புதிய இடத்தில் பதற்றத்தில் மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பியோடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானிய இளைஞர்கள் இருவரையும் பொலிசார் விடுதலை செய்தனர்.