ஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
நீதித்துறையில் எதிர்கால பதவி உயர்வுகள் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு இணங்க, சிரேஷ்டத்துவத்தின் (Seniority) அடிப்படையில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதித்துறையில் பதவி உயர்வுகள் பாரம்பரியமாக சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், அண்மைய காலங்களில் இந்த நடைமுறையிலிருந்து விலகிய சில சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
திறமையின் அடிப்படையில் சிரேஷ்டத்துவத்தைப் புறக்கணிப்பதென்றால், அதற்கான தெளிவான அல்லது வெளிப்படையான வழிகாட்டல்கள் தற்போது இல்லை என்றும் குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், நீதி நிர்வாகம் பாரபட்சமற்ற முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் வெளிப்படையான பதவி உயர்வு முறை மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திறமையை மதிப்பீடு செய்வதற்கான முறையான மற்றும் வெளிப்படையான வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்படும் வரை, சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகளை வழங்குமாறு சங்கம் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் அரசியலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோரின் கையொப்பத்துடன் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.