இன்று தைப்பூச நாள்; நம்பியவர்களின் சிக்கல்களை தீர்த்துவைப்பான் சிங்காரவேலன் !
தமிழ் கடவுளான, வெற்றி வேலவன் முருகனுக்குக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று.
தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும்.
இன்று (11) அழகன் முருகனுக்கு உகந்த மிகவும் விசேடமான தைப்பூச திருநாள் ஆகும். தமிழ் நாட்டில் மட்டுமன்றி மலேசியா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள ஆலயங்களில் முருப்பெருமானுக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெறும்.
மகத்துவம் வாய்ந்த நன்னாள்
தைப்பூசத் திருநாளில் தான் ஆறு முகங்களாக, ஆறு குழந்தைகளாக இருந்த முருகக் கடவுள் ஒருமுகம் கொண்டு, ஐக்கியமான நாளாக, ஏகமுகனாக முருகப்பெருமான் காட்சி அளித்ததாகப் போற்றப்படுகிறது.
ஞானத்தின் வடிவமாக முருகப்பெருமானைச் சொல்கிறது புராணம். ஆணவத்துடன் இருந்த சூரபத்மனை அழிக்கத்தான் வேல் கொண்டு புறப்பட்டான் முருகப் பெருமான்.
நம் கர்மாவை முடிவுக்குக் கொண்டு வந்து, இம்மையிலும், மறுமையிலும் அருள்பாலிக்கும் குருவாகத் திகழ்கிறார் ஞானவேல் முருகம் பெருமான். அப்படி ஞானத்தை அருளும் முருகப்பெருமானை வழிபடும் திருநாளாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
வேண்டுவன தருவான் முருகன்
ஆறுபடைவீடுகளில் குடியிருக்கும் முருகப்பெருமான் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் முருகக் கடவுளுக்கு இன்று விசேச அபிசேக அலங்காரங்கள் நடைபெறும்.
இந் நாளில் ராஜ அலங்காரத்துடன் திகழும் முருகக் கடவுளைத் தரிசிப்பது செல்வத்தையும் வாழ்வில் இன்னல்களை பொக்கி இன்பம் தரும் என்பது ஐதீகம்.
தைப்பூசத் திருநாளில், ஞானக் கடவுளை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எண்ணற்ற பலன்களைத் தரும்.
இன்றையதினம் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சார்த்தி செந்தில் வேலனை தரிசித்து பிரார்த்தனைச் செய்யுங்கள். உங்கள் , வாழ்வின் சிக்கல்களையெல்லாம் தீர்த்து பனிபோல் விலக வைப்பான் சிங்காரவேலன் .
இந்த நன்னாளில் வெற்றிப் பொருநனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம்.
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த தைப் பூச திருநாளில் முருகர்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம்.