இலங்கையில் துன்புறுத்தல்; யானைகளை திருப்பி கேட்கும் தாய்லாந்து!
தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் குறித்த யானைகள் மோசமாக பராமரிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள்
தாய்லாந்து யானைகளான Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டார்.
கடந்த ஆண்டு தாய் யானை மீட்புக் குழுவால் இந்த கவலைகள் முதலில் வெளிப்படுத்தப்பட்டன. தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, சரியான வாழ்க்கைத் தரங்கள் இல்லாமல் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
அதோடு குறித்த விலங்குகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.