சென்னையில் பயங்கரம்; பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை!
சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி சுவேதா என்பவர் இன்று பகல் கத்தியால் குத்திக் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் சினேகத்தால் மலர்ந்த காதலில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நிகழ்ந்த பயங்கரம் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுவேதா. இவர் தாம்பரம் எம்.சி.சி கல்லூரியில் பட்டயபடிப்பு படித்து வந்தார். இந்நிலையில் வகுப்பு முடிந்து தோழிகளுடன் வெளியே வந்த சுவேதாவை அவரது ஆண் நண்பர் ராமச்சந்திரன் என்பவர் மறித்து தகராறு செய்துள்ளார்.
அத்துடன் சுவேதாவை தாக்கியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறியபடியே சுவேதா சாய்ந்த நிலையில் அவரது தோழிகளும் அக்கம்பக்கத்தினரும் , கையில் கத்தியுடன் நின்றிருந்த ராமச்சந்திரனை சுற்றிவளைத்த நிலையில் தன்னை தானே கழுத்தை லேசாக அறுத்துக் கொண்டு அங்கேயே மயங்கி விழுந்தார் ராமச்சந்திரன்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், லேசான காயத்துடன் மயங்கி கிடந்த ராமச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரயில் சினேகத்தால் மலர்ந்த காதல், கருத்துவேறுபாட்டால் பிரிந்ததால், நிகழ்ந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முதல் உதவி சிகிச்சைக்கு பின் ராமச்சந்திரனை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தங்கள் கண்முண்ணே நிகழ்ந்த பயங்கர சம்பவத்தை கண்டு சுவேதாவின் தோழிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி கதறி அழுதனர்.
கண்டதும் காதல் கொண்டதால் , கொண்டவன் நல்லவனா கெட்டவனா என்பதை முழுமையாக அறிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.