கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் சற்று முன்னர் திடீர் பதற்றம் ; பாதுகாப்பு படையினர் களத்தில்
கொழும்பு, பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீர் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு சுமார் 10.20 மணியளவில், சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டின் பின்னர் ஏற்பட்ட அமைதியற்ற நிலை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.