மாம்பழத்தால் தம்புள்ளையில் ஏற்பட்ட பதற்றம்.!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கும், அங்கு மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (21-11-2024) இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறையை புறக்கணிக்கும் கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும், கடைகளை தற்காலிகமாக மூடவும் பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இருப்பினும், தற்காலிகமாக கடைகளை மூடுவதற்கு எடுத்த தீர்மானித்தால், காலையில் மாம்பழம் விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் கடும் பதற்றம் ஏற்பட்டது.
இதன் காரணமாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகள், மிகுந்த சிரமப்பட்டு கொண்டு வரும் மாம்பழங்களை விற்பனை செய்ய இடமில்லாததால், லொறிகளிலும், கடைகளுக்கு அருகில் தரையிலும் மாம்பழங்களை விற்பனை செய்வதாகக் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதால், ஏனைய விவசாயிகளும், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருபவர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சி. எஸ்.சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த மாம்பழ விற்பனை முறையால் பொருளாதார மத்திய நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இன்றையதினம் ஏற்பட்ட இந்த பதற்றநிலையால் பொருளாதார நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகளும் தடைப்பட்டிருந்தன.