நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் பதற்றமான சூழ்நிலை; அதிரடிபடையினர் குவிப்பு
இரண்டாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சற்று முன்னர் மீண்டும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகக் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய சம்பவங்களைத் தொடர்ந்து இன்று காலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், சிறைச்சாலையில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மதியம் கைதிகள் மோதல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந் நிலையில் இன்று (06) காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தற்போது அங்கு மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.