நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; விசாரணை நடத்த குழு நியமனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்த விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையிலான இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளநர். அத்துடன், சுமார் 35 காயமடைந்த கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 35 கைதிகள் வைத்தியசாலையில்
சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை வெளிப்படுத்தியமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே இந்த வன்முறைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
"போரு மூணா" என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட சுரேஷ் என அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரே கைதிகளுக்கிடையிலான இந்த வன்முறை மோதலைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கைதிகளுக்கிடையிலான மோதலின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் குழுவொன்று சிறைக்கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆண் கைதிகளும் சிறைக் கூரையின் மீது ஏறி தனித்தனியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் திரண்டு, உள்ளே இருப்பவர்களின் நிலை குறித்த தகவல்களை வழங்க அதிகாரிகள் தவறிவிட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மற்றும் சுற்றியுள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) மற்றும் கலவரத் தடுப்புப் பிரிவினரும் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டு, அமைதியை நிலைநாட்டவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆர்ப்பாட்டத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைதிகள் கட்டிடத்தின் மேல் இருந்தபோது கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.