பெண்களைக் கர்ப்பமாக்கினால் 10 இலட்சம் ரூபாய் ; குறுக்கு வழியில் குபேர் ஆக ஆசைப்பட்டு ஏமாந்த பலர்!
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களைக் கர்ப்பமாக்கினால் 10 இலட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட குழு ஒன்றை பீகார் மாநில சைபர் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முகநூல்,மற்றும் வாட்ஸ்அப் ஊடாக கவர்ச்சியான விளம்பரங்களை பரப்பி இந்த மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகையில்,

முயற்சி தோல்வியடைந்தால் கூட 5 இலட்சம் ரூபாய்
பெண்களைக் கர்ப்பமாக்கினால் 10 இலட்சம் ரூபாய், முயற்சி தோல்வியடைந்தால் கூட 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்" என ஆண்களை இவர்கள் ஈர்த்துள்ளதுடன் இதற்காக சில விளம்பர அழகிகளின் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.
மோசடி கும்பலிடம் சிக்கியோரிடம் பதிவுக் கட்டணம் மற்றும் தங்கும் விடுதி கட்டணங்கள் எனக்கூறி ஆரம்பத்திலேயே பெரும் தொகையை வசூலித்துள்ளது.
பணம் செலுத்திய பின்னர், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி இந்தகுழு தொடர்ந்து பணம் பறித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலகுவாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பலர் தமது சேமிப்பு முழுவதையும் இழந்த நிலையில் சமூகத்தில் ஏற்படும் அவமானத்திற்கு அஞ்சிப் பெரும்பாலானவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பொதுமக்களுழுக்கு இச்சம்பவம் அதிர்ச்சியையும் அதேசமயம் சமூக ஊடக மோசடிகள் குறித்த விழிப்புனர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.