மின்னணு பயண அனுமதி விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக சலுகை
இலங்கையின் மின்னணு பயண அனுமதி (ETA) முறைமையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்ணப்பதாரர்களுக்காக தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய நடைமுறைகளின்படி, சுற்றுலா அல்லது வணிக நோக்கங்களுக்காக மின்னணு பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பயணிகள் (சில குறிப்பிட்ட நாடுகளைத் தவிர) www.eta.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உத்தியோகபூர்வ அனுமதி கடிதம் கிடைக்காவிட்டாலும், விண்ணப்பதாரர்கள் தமது மின்னணு பயண அனுமதி குறிப்பு அறிவிப்பை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பு அறிவிப்பு சரிபார்க்கப்பட்டதும், விமான நிலையத்திலேயே சுற்றுலா அல்லது வணிக ரீதியான மின்னணு பயண அனுமதி வழங்கப்படும்.
பயணிகள் தமக்குத் தேவையான அனைத்து ஆதரவு ஆவணங்களையும் தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும், நிலையான நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், ஆப்கானிஸ்தான், கானா மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இலங்கையில் உள்ள ஒரு அனுசரணையாளர் மூலம் குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் குறுகிய கால விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வடகொரிய பிரஜைகள் குறுகிய கால விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக வெளியுறவு அமைச்சின் பரிந்துரையைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மூலம் அறிவிக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.