நாட்டில் சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை அதிகரிப்பு ; வெளியான விசேட அறிக்கை
இலங்கை உட்பட முழு உலகமும் இன்று சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில், நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக காவல்துறை சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய அறிக்கையில் உள்ள தரவுகளின்படி,
2023 ஆம் ஆண்டில் 167 பாடசாலை வயது சிறுமிகள் கருவுற்றதாகவும் 2024 ஆம் ஆண்டில் இவ்வாறான 213 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி சிறுமிகள் மத்தியில் 10 வயது சிறுமியொருவர் உள்ளடங்கியிருந்ததாகச் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் படி, 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இதுபோன்ற பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார்.