கொழும்பில் மருத்துவப்பீட மாணவர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை தாக்குதல்!
கொழும்பு - தாமரை தடாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப்பீட மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப்பீட மாணவர்களை கலைப்பதற்காகவே பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்களான லைசியம் வளாகம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் சதி செய்து நாட்டின் இலவசக் கல்வியை அழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியே மருத்துவப்பீட மாணவர்களின் நடவடிக்கைக் குழு இன்றையதினம் (27-10-2023) பிற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மொரட்டுவை, வயம்ப மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.
மாணவர்கள் தாமரை தடாகத்துக்கு அருகில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பு அணைகளை மீறி முன்னோக்கி செல்ல முற்பட்ட போதே பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.