பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
தமிழ் நாட்டில் பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
அதோடு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும்” என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கூறினார்.

குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் திகதி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்த அவர், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து, அதிரடிப்படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 2 டிஎஸ்பி, மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெறும் பெண் போலீஸார் மற்றும் பெண் எஸ்.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.