தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கைது
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன் இன்று கைது செய்யப்பட்டார்.
த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது.
இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர், த.வெ.க கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணைகளை நடத்தி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், த.வெ.க கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.